கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரிசி கடத்தல்
குமரி மாவட்டத்தில் இருந்து கடற்கரை கிராமங்கள் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலையில் நித்திரவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் ஆகியோர் நித்திரவிளை அருகே உள்ள நடைக்காவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக கேரளாவை நோக்கி 2 சொகுசு கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. அவற்றின் மீது சந்்தேகம் அடைந்த போலீசார் கார்களை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், கார்கள் நிற்காமல் வேகமாக சென்றன.
இதையடுத்து போலீசார் துரத்தி சென்று நம்பாளி பகுதியில் வைத்து கார்களை மடக்கி பிடித்தனர்.
2 டன் ரேஷன் அரிசி
தொடர்ந்து அவற்றை சோதனையிட்ட போது சிறு, சிறு மூடைகளில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து கார்களுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கார்களை ஓட்டி வந்த நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த ராஜவேல் (வயது47), தக்கலை மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்த விமல் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, கார்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story