கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? - பசவராஜ் பொம்மை பதில்
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது என்பது குறித்த கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.
பெங்களூரு:
மந்திரி சபை விரிவாக்கம்
கர்நாடக மந்திரிசபையில் 4 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்புவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இதுவரை ஆலோசனை நடத்தவில்லை. அதற்கு மேலிடமும் இன்னும் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசனைப்படி முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பதிலளிக்க மாட்டேன்
இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக மேல்-சபைக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது. அதைத்தொடர்ந்து பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மேல்-சபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் குமாரசாமி தனது நிலையை தௌிவுப்படுத்த வேண்டும். பா.ஜனதாவில் சேராததால் என்னை சிறையில் தள்ளினர் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன்.
பரிசோதனை செய்யப்படும்
கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது குறித்து கட்சி மேலிட தலைவர்களின் ஆலோசனைப்படி முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து நிபுணர் குழுவின் ஆலோசனைகள் கேட்கப்படும்.
கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் 'கிளஸ்டர்' (கொரோனா பரவும் பகுதி) பகுதிகளில் உள்ளவர்களுக்கு அதிகளவில் பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story