ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா


ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Dec 2021 3:06 AM IST (Updated: 7 Dec 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில், ஒரே குடும்பத்தில் உள்ள 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கவரிங் நகைக்கடை ஊழியர் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில், ஒரே குடும்பத்தில் உள்ள 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கவரிங் நகைக்கடை ஊழியர் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
ஆய்வு
குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 
இந்தநிலையில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரசால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு தொற்று
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாகர்கோவில் நகரில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது ஆசாரிபள்ளம் அருகே ஞானம்நகர் பகுதியில் உள்ள ஒரு முதியவருக்கு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 
மேலும் அவருடைய மனைவி, 2 மகன்கள், மருமகள் மற்றும் பேரக் குழந்தைக்கும் சோதனை நடந்தது. இதில் 6 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அதைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நலஅதிகாரி விஜய் சந்திரன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஞானம் நகர் பகுதிக்கு சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டனர். பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது. 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேர்களுக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
ஊழியருக்கும் பாதிப்பு
இதேபோல் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள ஒரு கவரிங் நகைக்கடை ஊழியருக்கும் கொரோனா இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. அந்த ஊழியர் நெல்லை மாவட்டம் மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் ஆவார்.
அதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் கடை முழுவதும் கிருமி நாசினி தெளித்து, கடையை பூட்டினர். மேலும் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் 8 பேருக்கு சளி பரிசோதனை நடத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கடையில் உள்ள ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சுமார் 800 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story