சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 1.54 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு பட்டம்-அமைச்சர் பொன்முடி வழங்கினார்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டங்களை வழங்கினார்.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 20-வது பட்டமளிப்பு விழா நேற்று பெரியார் கலையரங்கில் நடைபெற்றது. இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் திடீரென டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டதால் திட்டமிட்டபடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு பதிலாக பட்டமளிப்பு விழாவுக்கு பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கினார்.
பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் கோவிந்தன் ரங்கராஜன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அமைச்சர் பொன்முடி
தொடர்ந்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதுமுனைவர் பட்டம் பெற்ற 6 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த 575 பேருக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 196 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கத்துடன் பட்ட சான்றிதழை வழங்கினார். மொத்தம் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 777 பேருக்கு அமைச்சர் பொன்முடி நேரடியாக பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதனால் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 2019-2020 மற்றும் 2020- 2021-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
1.54 லட்சம் பேருக்கு பட்டம்
அதாவது சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளில் சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 312 பேரும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் படித்த 2,244 பேரும், பெரியார் தொலைநிலை கல்வி நிறுவனத்தில் படித்த 20 ஆயிரத்து 659 பேர் உள்பட ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு), கதிரவன், நிதி அலுவலர் பிரபாகர் ராஜ்குமார், டீன் பாலகுருநாதன், எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மாறவர்மன், ஹரிகிருஷ்ணராஜ், பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் சத்தியமூர்த்தி உள்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் சாம்பசிவம். விவசாயி. இவரது மனைவி போதம்மாள். இந்த தம்பதியின் மகன் முத்துக்குமார். இவர், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொருளியல் தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்கு அறக்கட்டளை சார்பில் மேலும் 6 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதனால் அவருக்கு நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 7 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story