மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் உபரி நீர் திறப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் மீண்டும் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் மீண்டும் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் 13-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.
இதையடுத்து அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அன்று நள்ளிரவு முதல் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பு
அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்தது.
இதனால் கடந்த 28-ந் தேதி முதல் அணையில் இருந்து உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பது முழுமையாக நிறுத்தப்பட்டது. மேலும் அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
மீண்டும் திறப்பு
இதன்படி அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி தண்ணீரும், அணையின் உபரி நீர் போக்கி யான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதமும் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதாவது கடந்த 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story