ஆத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் ஏரியில் மூழ்கி சாவு
ஆத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் ஏரியில் மூழ்கி இறந்தார்.
ஆத்தூர்:
ஆத்தூர் முல்லைவாடி கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். (வயது 38). இவர் ஆத்தூர் அருகே ராமநாயக்கன் பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் ஆத்தூரில் இருந்து மஞ்சினி செல்லும் வழியில் உள்ள துளுக்கனூர் ஏரியில் குளிக்க தனது நண்பர்கள் சிலருடன், கார்த்திகேயன் சென்றார். அப்போது திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.
இதனால் கார்த்திகேயன் தண்ணீரில் மூழ்கினார். உடனே அவருடைய நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி கார்த்திகேயன் உடலை மீட்டனர்.
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த கார்த்திகேயனுக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஏரியில் மூழ்கி கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story