சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை பரிசோதனை செய்ய ஏற்பாடு


சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை பரிசோதனை செய்ய ஏற்பாடு
x
தினத்தந்தி 7 Dec 2021 5:51 AM IST (Updated: 7 Dec 2021 5:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை பரிசோதனை செய்ய கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக விமான நிலைய ஆணையக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலந்தூர்,

ஓமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்காளதேசம், மொரீஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பன்னாட்டு விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு வரும் வரை விமான நிலைய வளாகத்திலேயே தங்கி இருக்க வேண்டும். அத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய தனியாக இடவசதி செய்யப்பட்டு உள்ளது. 500 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு, உணவு வசதியும் செய்யப்பட்டு உள்ளன. ரூ.700 கட்டணத்தில் செய்யப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவு வர 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். இதனால் ரூ.3,400 கட்டணத்தில் 45 நிமிடங்களுக்குள் முடிவு வரக்கூடிய ரேபிட் பி.சி.ஆர். பரிசோதனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

800 பேர்

இந்த பரிசோதனைக்கு பயணிகள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்க ஆன்-லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 800 பேர் வரை பரிசோதனை செய்யும் வகையில் கூடுதல் கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இலவச தொலைபேசி வசதியுடன், இலவச ‘வைபை’ வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு நியாயமான விலையில் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக விமான நிலைய ஆணையக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னுரிமை

வெளிநாடுகளில் இருந்து வந்து ரேபிட் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ளும் பயணிகள், சென்னையில் இருந்து இணைப்பு விமானம் மூலம் வேறு நகரங்களுக்கு செல்வதாக இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு 20 முதல் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படும்.

அதேபோல் பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு இலவசமாக கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும். மேலும் விமான பயணிகளை ‘ஸ்கிரீனிங்’ கருவி மூலமும் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story