சாலை, பாலம் வசதி அமைத்து தரக்கோரி ஓடைக்குள் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் ராமநத்தம் அருகே பரபரப்பு


சாலை, பாலம் வசதி அமைத்து தரக்கோரி ஓடைக்குள் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் ராமநத்தம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 10:56 AM IST (Updated: 7 Dec 2021 10:56 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே சாலை,பாலம் வசதி ஏற்படுத்தி தரக்கோரி ஓடைக்குள் அமர்ந்து கிராம மக்கள் காதிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

ராமநத்தம், 

திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள கொரக்கவாடி கிராமத்தில் மருபங்கியா ஓடை உள்ளது. இந்த ஓடைக்கு எதிரே 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தற்போது பெய்த மழையின் காரணமாக, ஓடை  அருகே உள்ள சாலை சேறும் சகதியுமாக உள்ளது. மேலும், அங்கு பாலம் வசதி இல்லாததால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து சென்றால், மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வர முடியாத நிலைக்கு ஆளானார்கள். 

ஓடைக்குள் அமர்ந்து போராட்டம்

 இதனால் மக்கள் அவசர தேவைக்கு கூட அந்த வழியாக வர முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

 இந்நிலையில், சாலையை சீரமைத்து தரக்கோரி, நேற்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், கைக்குழந்தைகளுடன் ஓடைக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஓடும் தண்ணீருக்கு நடுவே மேடான பகுதியில் அமர்ந்து, காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தால் தான் போராட்டத்தை விலக்கி கொள்வோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். 


அதன்பேரில், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முக சிகாமணி ஆகியோர் நேரில் வந்து பேச்சவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் சாலையை சீரமைத்து, ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தருவதாக உறுதியளித்தனர். 


அதன்பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story