ராக்கிங் பிரச்சினையால் மாணவர் தற்கொலை முயற்சி 4 மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் இருந்து ஒரு வாரம் இடைநீக்கம்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் ராக்கிங் பிரச்சினையால் மாணவர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக 4 மாணவர்கள் கல்லூரியில் இருந்து ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் ராக்கிங் பிரச்சினையால் மாணவர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக 4 மாணவர்கள், கல்லூரியில் இருந்து ஒரு வாரம் இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.
ராக்கிங் புகார்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த 19 வயது மாணவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சீனியர் மாணவர்கள் சிலரால் ராக்கிங் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தநிலையில் அந்த மாணவர் நேற்று முன்தினம் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் துறை ரீதியான விசாரணை நேற்று நடத்தப்பட்டது.
இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறியதாவது:-
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல மாதங்களுக்கு பின் நேரடி வகுப்புக்கள் அண்மையில் தொடங்கப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கான விடுதிகளும் செயல்பட தொடங்கின. விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவர், 3-ம் ஆண்டு படிக்கும் சில மாணவர்கள் தன்னை ராக்கிங் செய்துள்ளதாக புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வந்தது.
4 மாணவர்கள் இடைநீக்கம்
இந்த நிலையில் அந்த மாணவர் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மனநல மருத்துவர்கள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ராக்கிங் கமிட்டி மற்றும் விடுதி வார்டன்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி ராக்கிங் தொடர்பான புகாரில் சிக்கிய 4 மாணவர்கள் ஒரு வாரம் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர் விடுதியில் இருந்து அவர்களை நிரந்தரமாக வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
விடுவிப்பு
மேலும் விடுதி வார்டன்களாக கூடுதல் பொறுப்பு வகித்த வந்த 2 பேர் அந்த பணியில் விடுவிக்கப்படுகிறார்கள். அதற்குரிய கடிதம் அவர்களிடம் பெறப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்ற மாணவரின் நலன் கருதி, அவரை பெற்றோர் கண்காணிப்பில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ராக்கிங் தடுப்பு குறித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்தாலோசனை நடத்தி மாணவ-மாணவிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story