தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறிய நவீன கருவி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறிய நவீன கருவி வந்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறிய நவீன கருவி வந்துள்ளது. தொற்று கண்டறியப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் தனி வார்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
ஒமைக்ரான் பரவல்
கொரோனா வைரஸ் அவ்வப்போது பல்வேறு உருமாற்றங்களை பெற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவி வருகிறது.
இந்த ஒமைக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளில் ஒமைக்ரான் தனி வார்டுகளும் தொடங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
நவீன கருவி
மேலும், ஒமைக்ரான் தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வகமும் ஒன்றாகும். தூத்துக்குடியில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதால் தூத்துக்குடியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்துக்கு ‘டேக்பாத் ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் கிட்' என்ற அதிநவீன கருவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கருவி ஓரிரு நாட்களில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் நிறுவப்பட இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த கருவி மூலம் முதல்கட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று அறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்படுவார். அதன்பிறகு, அவரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படும் என்று டாக்டர்கள் கூறினர்.
Related Tags :
Next Story