விளாத்திகுளம் அருகே மீனவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
விளாத்திகுளம் அருகே மீனவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் சிந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகக்கனி (வயது 62). மீனவர். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த நாகசாமி, அவரது மகன் சக்திவேல் ஆகியோரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஆறுமுகக்கனி மற்றும் நாகசாமி ஒரே தொழில் செய்து வருவதால் நண்பர்களாக இருந்து வந்தனர். நாகசாமி தனது தொழிலுக்காக ஒருவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி, அதனை திருப்பி கொடுக்க முடியாத சூழலில் இருந்துள்ளார். கடன் கொடுத்தவர் நாகசாமிக்கு நெருக்கடி கொடுத்ததால், ஆறுமுகக்கனி பணம் ஏற்பாடு செய்து கொடுத்து கடனை அடைக்க உதவி செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகக்கனி அந்த வழியாக வந்த நாகசாமி, சக்திவேல் ஆகியோரிடம் நான் பணம் வாங்கிக் கொடுத்து உதவி செய்துள்ளேன். ஆனால் சக்திவேல் வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வருவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த நாகசாமி, சக்திவேல் ஆகிய இருவரும் சேர்ந்து ஆறுமுகக்கனியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகக்கனி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நாகசாமியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story