நெகமத்தில் இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்


நெகமத்தில் இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்
x
தினத்தந்தி 7 Dec 2021 6:33 PM IST (Updated: 7 Dec 2021 6:33 PM IST)
t-max-icont-min-icon

நெகமத்தில் இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்

நெகமம்

நெகமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அதனால் உடனடியாக புதிய கட்டிடம் கட்டி கிராம நிர்வாகம் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 

கிராம நிர்வாக அலுவலகம் 

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், நெகமம் பேரூராட்சி பகுதியில் கிழக்கு பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவவலகம் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும் மேல் பகுதியில் உள்ள சுவற்றில் இருந்து இரும்பு கம்பிகள் பெயர்ந்து சிமெண்டு கற்கள் கீழே விழும் நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. 
இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி ஒழுகிவருகிறது. தண்ணீர் வடிவதால் உள்ளே உள்ள பட்டா, சிட்டா நகல் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி வந்தது. மேலும் தளவாட பொருட்கள், மேசை நாற்காலி இருக்கைகள் அனைத்தும் நனைந்து துருப்பிடித்த நிலை ஏற்பட்டது.

வருவாய் அலுவலகத்தில் செயல்படுகிறது

வெளிப்புற பகுதியில் மழை காலங்களில் பெய்யும் தண்ணீர் உள்ளே வந்துவிடுகிறது. இதனால் சேறும் சகதியுமாக அலுவலகம் மாறிவிடுகிறது. இதன்காரணமாக அலுவலக பணியாளர்கள் அங்கு அமர்ந்து பணியாற்ற வெகு சிரமப்பட்டு வந்தனர். 

மேலும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விவசாயிகள், பொதுமக்கள் அங்கு செல்ல அச்சம் அடைந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் அந்த அலுவலகத்தை மாற்றி விட்டு தற்போது தாராபுரம் ரோட்டில் உள்ள நிலவருவாய் அலுவலக கட்டிடத்தில் தற்காலிக கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கும் போதுமான இடவசதி இல்லாததால் பொதுமக்கள் வெளியே தான் காத்து நிற்கும் நிலை நிலவுகிறது. 

புதிய அலுவலகம் வேண்டும் 

அதனால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக காணப்படும் நெகமம் கிராம நிர்வாக அலுவலகத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். 

மேலும், அந்த பழைமையான கட்டிடத்தை இடத்துவிட்டு புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story