நீலகிரியில் கடந்த ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதியாக ரூ.85 லட்சம் வசூல்
நீலகிரியில் கடந்த ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதியாக ரூ.85 லட்சம் வசூல்
ஊட்டி
நீலகிரியில் கடந்த ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதியாக ரூ.85¾ லட்சம் வசூலிக்கபட்டது என்று திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொடிநாள் விழா
ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முப்படை வீரர்கள் வாரிய உப தலைவர் ஜான் டேனியல் வரவேற்றார். விழாவுக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் 3 ஆயிரத்து 286 பேர், அவர்களின் கைம்பெண்கள் 1,142 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்து உள்ளனர். கைம்பெண்களுக்கு ரூ.4 ஆயிரம், ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுட்காலம் மாதாந்திர நிதி உதவியாக ரூ.4 ஆயிரம் உள்பட மொத்தம் 44 பேருக்கு கடந்த ஓராண்டில் ரூ.44 லட்சத்து 94 ஆயிரம் வழங்கப்பட்டது.
பரிந்துரை
பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியில் இருந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை, திருமண மானியம் வழங்க 161 விண்ணப்பங்கள் மைய முப்படைவீரர் வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவில் 156 பேர் பதிவு செய்தனர்.
பல்வேறு பணியிடங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, வேலைவாய்ப்பு பதிவு ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு ரூ.85¾ லட்சம் வசூல்
முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கொடிநாள் நிதி வசூல் பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் திரட்டப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ரூ.86 லட்சத்து 89 ஆயிரம், 2019-ம் ஆண்டு ரூ.56 லட்சத்து 31 ஆயிரத்து 503, 2020-ம் ஆண்டு ரூ.85 லட்சத்து 73 ஆயிரத்து 278 கொடிநாள் நிதி திரட்டப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பாண்டு ரூ.62 லட்சத்து 62 ஆயிரம் கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கொடிநாள் நிதி அதிகம் வசூலித்த துறை அலுவலர்களுக்கு தலைமை செயலாளரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் 12 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் வெலிங்டன் ராணுவ குடியிருப்பு கமாண்டன்ட் அணில் பண்டிட் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கொடிநாள் நிதி வசூலை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story