2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 435 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது


2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 435 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது
x
தினத்தந்தி 7 Dec 2021 7:57 PM IST (Updated: 7 Dec 2021 7:57 PM IST)
t-max-icont-min-icon

2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 435 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

கடலூர், 

2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று முடிந்த நிலையில், உடற்தகுதி தேர்வு கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இதில் ஆண்கள், பெண்கள் என 435 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை சோதனை செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு

இந்நிலையில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 7-ந்தேதி நடைபெறும் என்று தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 435 பேருக்கு நேற்று காலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி கட்டிடத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை சோதனை நடந்தது. இதில் 269 ஆண்கள், 166 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தனித்தனியாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
அதன்பிறகு கைரேகை சோதனையும் நடந்தது. இதில் தேர்வான நபர்களுக்கு போலீஸ் நிலையங்களில் ஏதேனும் வழக்கு உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக இந்த கைரேகை சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை இன்று (புதன்கிழமை) முதல் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதில் நாள் ஒன்றுக்கு 75 பேர் வீதம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story