மோட்டார் சைக்கிள் மோதி பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
சாலையில் நடந்து சென்றனர்
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம். இவரது மனைவி மஞ்சுளா (வயது 30). இவர்களது மகன் அஜய் (8), மகள் அஜிதா (2). நேற்று முன்தினம் மாலையில் மஞ்சுளா தனது மகன் மற்றும் மகள், அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி செந்தாமரை (43) ஆகியோர் தே.கோபுராபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செம்பளாக்குறிச்சியில் இருந்து தே.கோபுராபுரம் நோக்கி செம்பளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தனபால் மகன் ராஜேஷ்குமார் (19) என்பவர் அவரது நண்பர்களுடன் பைக்கில் அதிவேகமாக வந்துள்ளார்.
சிறுவன் சாவு
சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த மஞ்சுளா, அஜய், அஜிதா, செந்தாமரை ஆகியோர் மீது ராஜேஷ்குமார் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவன் அஜய்யை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். படுகாயமடைந்த 3 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
சாலை மறியல்
இதற்கிடையே சிறுவனின் உடலை வாங்க மறுத்து, அவனது உறவினர்கள் விருத்தாசலம் கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விபத்து நடந்த இடத்துக்கு அருகே தே.கோபுராபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மது குடித்துவிட்டு மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது.
அதேபோன்று தான், நேற்று முன்தினம் மதுபோதையில் ராஜேஷ்குமார் அவரது நண்பர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று மோதியதால் சிறுவன் அஜய் உயிரிழந்துள்ளான். எனவே விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தே.கோபுராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் அப்போது தான் அஜயின் உடலை பெற்று செல்வோம் என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சவார்த்தை நடத்தினார். அப்போது, டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து கோட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி மற்றும் நிர்வாகிகளுடன் கடைவீதியிலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார் 3 நாட்களுக்குள் தே.கோபுராபுரம் கடையை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் இதையடுத்து சிறுவனின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story