குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கேட்டு தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் சாலை மறியல் சிதம்பரத்தில் பரபரப்பு


குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கேட்டு தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் சாலை மறியல் சிதம்பரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 8:06 PM IST (Updated: 7 Dec 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கேட்டு தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிதம்பரம், 

சாலை மறியல்

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுவாமி சகஜானந்தா அரசினர் தொழில் பயிற்சி மையம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு படிக்கும் மாணவர்கள் நேற்று காலை, வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்று சிதம்பரம் -சீர்காழி செல்லும் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் தரப்பில் கூறுகையில், எங்கள் தொழிற்பயிற்சி மையத்தில் குடிநீர் மற்றும் கழிவறை வசதி சரியான முறையில் இல்லை. இதுபற்றி பலமுறை நிர்வாகத்திடம் சொல்லியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

பின்னர் மாணவர்களை தொழிற்பயிற்சி மைய முதல்வர் பெரியசாமியிடம் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொழிற்பயிற்சி முதல்வர் பெரியசாமி விரைவில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும், எனவே போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story