விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் திறப்பு: மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை என்று பா.ஜ.க.வினர் வாக்குவாதம் கடும் எதிர்ப்பால் ராகுல்காந்தியின் படம் அகற்றப்பட்டது
விருத்தாசலத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை என்று கூறி பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது கடும் எதிர்ப்பால் அங்கிருந்த ராகுல்காந்தியின் உருவ படத்தை அகற்றினர்.
விருத்தாசலம்,
முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
விருத்தாசலத்தில் ரூ.2.20 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் கட்டப்பட்டு, நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி சென்னையில் நடந்த விழாவில், காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையொட்டி விருத்தாசலத்தில் நடந்த விழாவில் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக. கோவிந்தசாமி, காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ரஞ்சித் குமார் கடலூர் துணை பதிவுத்துறை தலைவர் ஜனார்த்தனன் மாவட்ட பதிவாளர்கள் பரமேஸ்வரி, ஜெயக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார்கள்.
முன்னதாக விருத்தாசலம் இணை சார்பதிவாளர் வேல் முருகன் வரவேற்றார். இதில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.கணேஷ்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், ஆர்.கே குமார், தளபதி குமார், ராஜா, சரவணன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் ராஜன், ராமராஜன், சுப மணிகண்டன், இருதய சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க.வினர் எதிர்ப்பு
இதற்கிடையே புதிய அலுவலகத்தில் காந்தி, அம்பேத்கர், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி அறிந்த பா.ஜ.க.பிரமுகரான ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு வந்து, ராகுல்காந்தி உள்ளிட்டவர்களின் படம் இருக்கும் போது, ஏன் பிரதமர் மோடியின் புகைப்படைத்தை மட்டும் வைக்கவில்லை என கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராகுல்காந்தி படம் அகற்றம்
இதையடுத்து ராகுல் காந்தியின் படம் அங்கிருந்து அகற்றப்பட்டது. தொடர்ந்து மோடியின் படம் வைக்க வேண்டுமென பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். அதற்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பா.ஜ.க.வினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் பா.ஜ.க.வினர் மோடியின் படத்தை வைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அங்கேயே இருந்தனர்.
முன்னாள் பிரதமர்கள் படமும் அகற்றம்
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்முடிவில், முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரது படங்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, பிரதமர் மோடியின் படம் அங்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story