முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடிக்கும் அணைகள்


முழு கொள்ளளவில் தொடர்ந்து  நீடிக்கும் அணைகள்
x
தினத்தந்தி 7 Dec 2021 8:45 PM IST (Updated: 7 Dec 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடிக்கும் அணைகள்

தளி
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணை முழு கொள்ளளவை நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமூர்த்திஅணை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாலாற்றை தடுத்து திருமூர்த்தி அணை கட்டப்பட்டது. இந்த அணை 60 அடி உயரம்  கொண்டது.  இந்த அணைக்கு பாலாறு, உழுவிஆறு, கொட்டையாறு, பாரப்பட்டிஆறு, குருமலைஆறு, வண்டியாறு, உப்புமண்ணம்ஓடை, கிழவிபட்டிஓடை உள்ளிட்ட ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளன. அது தவிர அணைக்கு  அப்பநீராறு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் நீராதாரமாக இருக்கிறது. 
இந்த அணைகளுக்கும் திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. திருமூர்த்தி அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் அணையை ஆதாரமாகக் கொண்டு உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கினர் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அமராவதி அணை
 அமராவதி ஆற்றை தடுத்து கட்டப்பட்டுள்ள அமராவதிஅணையின் உயரம் 90 அடி. இந்த அணைக்கு சின்னாறு, பாம்பாறு, தேனாறு மூலம் நீர்வரத்து ஏற்படுகிறது.  இந்த அணை மூலம்  திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 
அமராவதிஅணையில் இருந்து ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரானது குதிரையாறு, நங்காஞ்சியாறு, பாலாறு, புறந்தலாறு, நல்லதங்காள் ஓடை போன்ற துணை நதிகளுடன் இணைந்து  220 கிலோமீட்டர் தூரம் பயணித்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது.
உபரிநீர் திறப்பு
மலை பகுதியில் தொடந்து மழை பெய்து வருவதால்  அமராவதி மற்றும் திருமூர்த்தி அணை முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அமராவதி அணையில் குறிப்பிட்ட இடைவெளியிலும் திருமூர்த்தி, அணையில் ஒரு முறையும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 
அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை உதவிப்பொறியாளர்கள் பாபுசபரீஸ்வரன், மாரிமுத்து தலைமையிலான பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



Next Story