கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி


கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 7 Dec 2021 10:26 PM IST (Updated: 7 Dec 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி

கோவை

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

சிறுவனுக்கு டெங்கு 

கொரோனா தொற்றை தொடர்ந்து கோவையில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு கடந்த வாரம் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த சிறுவனை பெற்றோர் அங்குள்ள ஒரு தனியார் கிளினிக் டாக்டரிடம் காண்பித்து உள்ளனர். ஆனால் சிறுவனின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

பரிதாப சாவு 

இதையடுத்து அந்த சிறுவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பெரிய நெகமம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப் பட்டது. 
இதில் சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தல் 

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வில்லை. எனவே காய்ச்சல் காரணமாக சிகிச்சை வருபவர்களின் விபரங்களை தெரிவிக்கும்படி தனியார் ஆஸ்பத்திரி களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். 2 நாட்கள் அல்லது அதற்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். டெங்கு மற்றும் கொரோனா தொற்று பாதிப்பிற்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story