புதுக்கோட்டையில், விற்பனைக்காக போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 4 வாலிபர்கள் கைது


புதுக்கோட்டையில், விற்பனைக்காக  போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 7 Dec 2021 10:39 PM IST (Updated: 7 Dec 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை:
தேடுதல் வேட்டை 
புதுக்கோட்டையில் இளைஞர்கள் போதை பொருட்கள் உபயோகப்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை, நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போதை மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்பவர்கள், அதனை பயன்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில்
ஈடுபட்டனர். 
போதை மாத்திரைகள் பறிமுதல் 
இந்நிலையில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து திருக்கோகர்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள், பிளாஸ்டிக் கப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
4 பேர் கைது 
பின்னர் இவற்றை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த புதுக்கோட்டை திருவப்பூர் மாயாண்டிசாமி நகரை சேர்ந்த பழனி மகன் மணிகண்டன் என்கிற புரோட்டா மணி (வயது 20), நரிமேடு செல்வம் மகன் ஹரிஹரன் (23), பொன்னப்பன் ஊரணி சீனிவாசன் மகன் மணிகண்டன் (20), மாயாண்டி சாமி நகரை சேர்ந்த செல்லத்துரை மகன் சந்தோஷ்குமார் (27) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story