அரசு பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது; பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் காயம்
விழுப்புரம் அருகே அரசு டவுன் பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம், டிச.
விழுப்புரம் அடுத்த சித்தாத்தூரில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பஸ்சை பெரிச்சானூரை சேர்ந்த பழனிவேல் (வயது 50) என்பவர் ஓட்டினார்.
இந்த பஸ் மாலை 4 மணியளவில் ஆயந்தூர் நிம்மதி நகர் என்ற இடத்தில் சென்றபோது அங்கு மொபட்டுடன் நின்றுகொண்டிருந்தவர் திடீரென இடதுபுறமாக குறுக்கே வந்தார். இதனால் அவர் மீது மோதாமல் இருக்க பஸ்சை அதன் டிரைவர் இடதுபுறமாக திருப்பியபடி பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறி சாலையோரமாக இருந்த வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சில் இருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினர்.
20 பேர் காயம்
உடனே அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவ- மாணவிகளான கல்பட்டை சேர்ந்த கல்பனா (14), பிரியதர்ஷினி (14), நாதன்காடுவெட்டியை சேர்ந்த கனிஷ்கா (10), காணையை சேர்ந்த ஷெரீன்பீலா (14), தெளியை சேர்ந்த சுபிக்ஷா (14), விழுப்புரம் பாண்டியன் நகரை சேர்ந்த தமிழரசி (17), மற்றும் ஆ.கூடலூரை சேர்ந்த ருக்மணி (62), ஆலம்பாடியை சேர்ந்த இந்திராணி (52), ஐஸ்வர்யா (50), லட்சுமி (60), கல்பட்டு ஜெயராமன் (61), ஞானம்பாள் (42) உள்பட 20 பேரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான அரசு டவுன் பஸ் வாய்க்காலில் இருந்து வெளியே மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story