முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்கள் தள்ளுபடி


முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 7 Dec 2021 10:47 PM IST (Updated: 7 Dec 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் வருகிற 10-ந் தேதியன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் கட்டாயம் குறுக்கு விசாரணை செய்யவும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்புக்கு விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம், 

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி முதல் தொடங்கியது. 
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகாததற்கான காரணம் குறித்து அவர்களது வக்கீல்கள்  மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

4 மனுக்கள் தள்ளுபடி

இந்த வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் விசாரிக்க அதிகாரம் கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்து அதன் விசாரணை நடந்து வருவதால் அதுவரை இவ்வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் விசாரிக்கக்கூடாது என்று ஒரு மனுவும், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் நாங்கள் குறுக்கு விசாரணை செய்து முடித்த பின்னரே மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்படி கேட்டு மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 மேலும், அரசு தரப்பு சாட்சிகளில் 4-வது சாட்சியான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் வாகன டிரைவராக பணியில் இருந்தவரும், தற்போது பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவருமான பாலமுருகன், 5-வது சாட்சியான பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு வழி பாதுகாவலராக சென்றவரும், தற்போது பெரம்பலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவருமான சந்திரசேகரன் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் வழங்கக்கோரியும் தனித்தனியாக 2 மனுக்கள் என முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 4 மனுக்கள் மீது அரசு தரப்பில் பதில் தெரிவிக்கும்படி நீதிபதி கோபிநாதன் கூறினார்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு தாக்கல் செய்த மனுக்களுக்கு எதிராக கடும் ஆட்சேபனை தெரிவித்து பதில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாதன், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு கோரிக்கையை நிராகரிப்பு செய்து அவர் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
குறுக்கு விசாரணை செய்ய உத்தரவு
தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) நீதிபதி கோபிநாதன் ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, அவரது கணவரான அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி, அப்போதைய பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டும், தற்போது தூத்துக்குடியில் பணியாற்றி வருபவருமான கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், மேலும் அன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு கட்டாயம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Next Story