தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 Dec 2021 11:11 PM IST (Updated: 7 Dec 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

தெருவிளக்குகள் ஒளிர்கிறது
குலசேகரபுரம் ஊராட்சியில் குலசேகரபுரம் ஊர் முதல் ஈத்தன்காடு வரை தெருவிளக்குகள் சரிவர பராமரிப்பு இன்றி எரியாமல் இருந்தன. இதனால், இரவு நேரங்களில் வேலைக்கு சென்றுவிட்டு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து 6-12-2021 அன்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தற்போது தெருவிளக்குகள் எரிகிறது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சாலை சீரமைக்கப்படுமா?
தோவாளையில் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் விரிவாக்கம் பணிகள் நிறைவு பெற்று பல மாதங்கள் ஆகியும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது பெய்துவரும் மழையால் சாலை மேலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
                               -கலையன்பன், ஆரல்வாய்மொழி.
சாய்ந்து நிற்கும் தொலைபேசி கம்பம்
நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள நடைபாதையில் ஒரு தொலைபேசி கம்பம் ஆபத்தான நிலையில் சாய்ந்து நிற்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் இந்த கம்பம் நிற்பதால் அந்த வழியாக செல்கிறவர்கள் ஒருவித அச்ச உணர்வுடன் செல்கிறார்கள். எனவே, சாய்ந்து நிற்கும் தொலைபேசி கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
                                -தமிழரசு, ஆரல்வாய்மொழி.
போக்குவரத்துக்கு இடையூறு
மேலபுத்தேரி ஊராட்சி பாரத்நகர் தெருவில் சாலைகளில் சிலர் டெம்போ, லாரி போன்ற வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால், அந்த வழியாக பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?    
                                -சுப்பிரமணியம், மேலபுத்தேரி.
திறப்பு விழா காண்பது எப்போது?
பறக்கை செட்டியத்தெரு 20-வது வார்டில் ஒரு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் பணிகள் முழுமையாக முடிந்து நீண்ட நாட்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே, அங்கன்வாடி மையம் திறப்பு விழா காண்பது எப்போது என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                                      -சொ. ராஜா, பறக்கை. 
ஆபத்தான நிலையில் மின் மீட்டர் பாக்ஸ்
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வைகுண்டப்பதியில் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு சுவிட்ச் மற்றும் மீட்டர் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாக்சின் மூடி சேதமடைந்து திறந்த நிலையில் தொங்கி கொண்டு உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு எளிதில் எட்டும் வகையில் மிகவும் தாழ்வாக தொங்கி கொண்டு இருப்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்து ஏற்படும் முன்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
                               -பால்துரை, வைகுண்டப்பதி.
சாலையில் வீணாகும் குடிநீர்
தலக்குளம் ஊராட்சி உடையார் பள்ளம் கிராமத்தில் சாலையில் பதித்துள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்,  தண்ணீர் திறந்து விடப்படும் போது குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து ஓடுகிறது. இதை சரி செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                     -ஜெயக்குமார், தலக்குளம். 
பஸ் வசதி வேண்டும்
நாகர்கோவில் நகராட்சியில் 19-வது வார்டு வேதநகர், சரக்கல்விளை, கீழவண்ணான் விளை பகுதியில் இதுவரை பஸ் வசதி இல்லை. இதனால், இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர்கள், வேலைக்கு செல்கிறவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி இந்த பகுதியில் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. 
                     -ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.


Next Story