அதிகாரி சமீர் வான்கடேக்கு எதிரான கருத்து-மந்திரி நவாப் மாலிக் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
வேண்டும் என்றே சமீர் வான்கடேவுக்கு எதிராக கருத்து கூறியது குறித்து விளக்கம் அளிக்க நவாப் மாலிக்கிற்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
வேண்டும் என்றே சமீர் வான்கடேவுக்கு எதிராக கருத்து கூறியது குறித்து விளக்கம் அளிக்க நவாப் மாலிக்கிற்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மானநஷ்ட வழக்கு
மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த அக்டோபர் மாதம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதை பொருள் வழக்கில் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். குறிப்பாக முஸ்லிமான சமீர் வான்கடே போலி பிறப்பு சான்றிதழ் மூலம் எஸ்.சி. என கூறி அரசு வேலையில் சோ்ந்ததாக கூறினார்.
இதையடுத்து சமீர் வான்கடேவின் தந்தை தியான்தேவ் வான்கடே நவாப் மாலிக்கிற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். அவர் சமீர் வான்கடே மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக கருத்து கூற நவாப் மாலிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது மானநஷ்ட வழக்கு மீதான விசாரணை முடியும் வரை சமீர்வான்கடே குறித்து சமூகவலைதளம், ஊடகங்களில் கருத்து கூற மாட்டேன் என மும்பை ஐகோர்ட்டில் நவாப் மாலிக் உறுதி அளித்து இருந்தார்.
விளக்கம் அளிக்க உத்தரவு
இந்தநிலையில் நேற்று தியான்தேவ் வான்கடே மும்பை ஐகோர்ட்டில் தன் வழக்கை அவசரமாக விசாரிக்க கேட்டு கொண்டார். மேலும் அவர், நவாப் மாலிக் சமீபத்தில் பிராந்திய செய்தித்தாளில் சமீர் வான்கடே குறித்து கருத்து கூறி அளித்த பேட்டியை சமர்பித்தார். அப்போது, நவாப் மாலிக் தரப்பில் ஆஜரான வக்கீல், அந்த பேட்டி தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது என கூறினார்.
எனினும் ஐகோா்ட்டு இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மேலும் நீதிபதிகள், "சமீர்வான்கடேவுக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற எங்களின் உத்தரவை மீறுவதாக இது உள்ளது. நவாப் மாலிக் எங்களின் உத்தரவை மீறி உள்ளார். எனவே வேண்டும் என்றே தான் கொடுத்த உறுதியை மீறிய நவாப் மாலிக் மீது நாங்கள் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கு விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்" என்றனர்.
பின்னர் மனு மீதான விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Related Tags :
Next Story