கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை-கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டு உள்ளார்.
நாமக்கல், டிச.8-
பொது இடங்களுக்கு செல்ல தடை
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தற்போது பரவ தொடங்கி உள்ளதால், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 10 லட்சத்து 43 ஆயிரத்து 103 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 6 லட்சத்து 6 ஆயிரத்து 787 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். தகுதியுடைய 3 லட்சத்து 41 ஆயிரத்து 197 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
நிறுவனங்களுக்கு அபராதம்
நாமக்கல் மாவட்டத்தில் பொது இடங்களான ரேஷன் கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், டீ கடைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், துணிகடைகள், கடை வீதிகள், ஓட்டல்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் திருச்செங்கோடு நகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக ஆணையாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story