10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் அதிரடி கைது-நாமக்கல்லில் பரபரப்பு
நாமக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் அரசு பள்ளி ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:
பாலியல் தொல்லை
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மதிவாணன் (வயது 52). இவர் மீது நேற்று முன்தினம் அந்த பள்ளியில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக சில மாணவிகளின் பெற்றோர் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரியிடம் புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், மாணவியை தகாத முறையில் பார்ப்பது, உரசுவது, தொடுவது, தள்ளி சென்றால் பக்கத்தில் வந்து நில் என கூறுகிறார் என புகார் தெரிவித்து இருந்தனர். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
ஆசிரியர் கைது
இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை பார்வதி நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆசிரியர் மதிவாணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்த ஆசிரியர் மதிவாணனை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், மாணவிகளின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படும் பாலியல் புகார் முற்றிலும் உண்மைக்கு மாறானது எனக் கூறி ஆசிரியர் மதிவாணனுக்கு ஆதரவாக சக ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் நாமக்கல் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story