தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு முகாம்


தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 8 Dec 2021 12:07 AM IST (Updated: 8 Dec 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தலைமை ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் தலைமை ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழிப்புணர்வு முகாம்
நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட 74 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர்களுக்கும் போக்சோ சட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு சிறப்பு முகாம் நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலை பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமை தாங்கி பேசினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிகளில் புகார் பெட்டி
பள்ளி குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீட்டில் இருப்பதை விட பள்ளிகளில் தான் மாணவ, மாணவிகள் அதிகமான நேரத்தை செலவிடுகிறார்கள். குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் தலைமை ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவிகள் கொடுக்கக்கூடிய புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது போலீசார் சார்பில் மாணவிகள் படிக்கக்கூடிய பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்படும். இந்த புகார் பெட்டி வாரம் ஒரு முறையோ அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையோ தலைமை ஆசிரியர் திறந்து, அதில் ஏதாவது புகார் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பாலியல் தொடர்பான புகார் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
4 கல்வி மாவட்டங்களிலும்...
இந்த விழிப்புணர்வு முகாமில் பள்ளி துணை ஆய்வாளர் ஜார்ஜ் பெனட் மற்றும் நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட 74 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 148 பேர் கலந்து கொண்டனர்.
மதியத்துக்கு பிறகு தக்கலை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு முகாம் தக்கலையில் நடந்தது. இன்று (புதன்கிழமை) குழித்துறை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்சிறையிலும், திருவட்டார் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருத்துவபுரத்திலும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன.

Next Story