தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை


தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Dec 2021 12:07 AM IST (Updated: 8 Dec 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை தரக்குறைவாக பேசியதால், தலைமை ஆசிரியையை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

அணைக்கட்டு
 
மாணவியை தரக்குறைவாக பேசியதால், தலைமை ஆசிரியையை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

தரக்குறைவாக பேசினார்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த மேல் பள்ளிப்பட்டில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். ரேவதி என்பவர் பள்ளியின் தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர் மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ஒரு மாணவி தலைமை ஆசிரியையிடம் சென்று விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். 

அதற்கு தலைமை ஆசிரியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வீட்டுக்கு அனுப்பாமல் வகுப்பறையில் இருக்கச்சொல்லி உள்ளார். உடல் நலம் பாதித்ததால் அந்த மாணவி வேறு ஒரு ஆசிரியை அனுமதியுடன் வீட்டுக்குச் சென்று பெற்றோர்களிடம் இது குறித்து கூறி உள்ளார். 

பள்ளியை முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரிையயிடம் கேட்டதாக‌ தெரிகிறது. அதற்கு அவர் முறையான பதில் கூறாததால் ஆத்திரமடைந்த அவர்கள் தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யக்கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தலைமை ஆசிரியையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுக்கும் அவர் முறையான பதில் கூறாததால் மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். 
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினார். 

எச்சரிக்கை

அப்போது இனி இதுபோன்ற தவறுகளை செய்தால் பணியிடை நீக்கம் செய்ய வேண்டியது வருமென எச்சரிக்கை செய்து விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story