100 நாள் வேலைதிட்டத்தில் தொடர்ச்சியாக பணி வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்
ஆரணி அருகே 100 நாள் வேலைதிட்டத்தில் தொடர்ச்சியாக வேலை வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி அருகே 100 நாள் வேலைதிட்டத்தில் தொடர்ச்சியாக வேலை வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலை திட்டம்
ஆரணியை அடுத்த கனிகிலுப்பை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 760 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 30 நாட்களுக்கு முன்பு ஒரு குழுவுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டு முறை வழங்கப்பட வேண்டியவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.
மேலும் மழையின் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. தொடர்ச்சியாக மூன்றாவதாக முதல் வேலை செய்து வந்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அடுத்தபடியான நிலையில் உள்ளவர்கள் நேற்று பணிக்குச் செல்லும்போது அவர்களுக்கு இன்று (நேற்று) விடுமுறை என தெரிவித்துள்ளனர்.
சாலை மறியல்
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், எங்களுக்கு ஒரு மாத காலமாக வேலை வழங்கப்படவில்லை என கூறி திடீரென ஆரணி - செய்யாறு நெடுஞ்சாலையில் எஸ்.வி. நகரம் ஊராட்சி கனிகிலுப்பை கூட்டு ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ரூபன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் கன்ராயன் ஆகியோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஊராட்சி செயலாளரை அழைத்து பேசினர்.
அப்போது ஊராட்சித் தலைவர் கூறுகையில், மழை பாதிப்பின் போது பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பயிர் பாதிப்பு கணக்கெடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டதால் இன்று வேலை இல்லை என தெரிவித்து உள்ளோம் ஆகவே நாளை (இன்று) உங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story