மதுரை பெரியார் பஸ் நிலையத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கட்டிய மதுரை பெரியார் பஸ் நிலையத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கட்டிய மதுரை பெரியார் பஸ் நிலையத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.175 கோடி செலவு
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பஸ் நிலையம் ரூ.175 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. வணிக வளாகம் பணிகள் ரூ.120 கோடி செலவிலும், பஸ் நிறுத்துமிடம் பகுதிகளுக்கான பணிகள் ரூ.55 கோடி செலவில் நடந்தன.
அதில் பஸ் நிறுத்தம் பணி முழுமையாக முடிந்து விட்டது. எனவே அதனை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் இன்று (புதன்கிழமை) காலை திறந்து வைக்கிறார்.
அதேபோல் ஜான்சிராணி பூங்காவில் ரூ.2 கோடியே 45 லட்சம் செலவில் கட்டப்பட்ட புராதன பஜார் மற்றும் ரூ.2 கோடியே 75 லட்சம் செலவில் கட்டிய சுற்றுலா மையம் மற்றும் அங்காடிகள் ஆகியவற்றையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கலெக்டர்-கமிஷனர் ஆய்வு
இதையொட்டி நேற்று பெரியார் பஸ் நிலையம், புராதன பஜார், சுற்றுலா மையம் ஆகியவற்றில் மின் அலங்காரம் செய்யப்பட்டது. மதுரை கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு ஆய்வு செய்து, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இன்று திறக்கப்பட உள்ள பெரியார் பஸ் நிலையத்தில் பல்வேறு வசதிகள் பொதுமக்களுக்காக செய்யப்பட்டு உள்ளன. பஸ் நிலைய கட்டுமான பணிகள் 3 ஆயிரத்து 104 சதுர மீட்டர் பரப்பளவில் நடந்துள்ளன. பெரியார் பஸ் நிலையத்தின் 2 தரைத்தளங்கள் வாகன காப்பகமாக செயல்படும். பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை, போலீஸ் கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.
போக்குவரத்தில் மாற்றம்
பெரியார் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
* மதுரை மேலவெளிவீதி ரெயில் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வலது புறத்தில் தினத்தந்தி பாலம் வழியாக செல்ல அனுமதி இல்லை. மேலும் வாகனங்கள் டி.பி.கே. ரோடு, ஹையத்கான் ரோடு வழியாக தினத்தந்தி பாலம் ஏறி செல்ல அனுமதிக்கப்படுகிறது.
* டி.பி.கே. ரோடு, முத்துபாலம் வழியாக வரும் வாகனங்கள் தெற்குவாசல் செல்வதற்கு அரசு பஸ்கள் தவிர மற்ற வாகனங்கள் வலதுபுறம் திரும்பி ஹையத்கான் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
* டி.பி.கே. ரோடு, முத்து பாலம் வழியாக வாகனங்கள் சிம்மக்கல், கோரிப்பாளையம் செல்ல தினத்தந்தி பாலத்தில் ஏறி வலதுபுறம் திரும்பி செல்ல அனுமதிக்கப்படுகிறது.
* பெரியார் பஸ் நிலைய வளாகத்திற்குள் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.
* தினத்தந்தி பாலம், தினத்தந்தி அலுவலக சந்திப்பில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு கட்டபொம்மன் சிலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.
* பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து தெற்கு வாசல் மற்றும் சிம்மக்கல் பகுதிகளுக்கு அரசு பஸ்கள் வெளியேறி செல்லவும், தினத்தந்தி பாலத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக வரும் வாகனங்கள் ரெயில் நிலையம் மற்றும் கட்டபொம்மன் சிலை வழியாக செல்ல 2 வழியாக மட்டும் வாகனங்கள் செல்ல போக்குவரத்து சிக்னல் பாயிண்ட் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story