158 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்ட பெண்


158 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்ட பெண்
x
தினத்தந்தி 8 Dec 2021 3:31 AM IST (Updated: 8 Dec 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 158 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு கொரோனா பாதிப்பில் இருந்து 45 வயது பெண் மீண்டுள்ளார். அந்த பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து உயிர்பிழைக்க வைத்துள்ளனர்.

பெங்களூரு:

கொரோனா வைரஸ்

  கொரோனா என்னும் அரக்கன் பலரின் வாழ்க்கையை தடம் புரட்டிபோட்டுவிட்டது. அதுபோல் தனது கோர பசிக்கு பலரை காவு வாங்கிக்கொண்டது.

  தற்போது அந்த வைரஸ் உருமாறி ஒமைக்ரான் என்ற வடிவில் மீண்டும் தனது கால்களை உலக நாடுகளில் பதித்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் 158 நாட்களுக்கு பிறகு மீண்டு வந்துள்ளார்.
  அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

45 வயது பெண்

  கொப்பல் மாவட்டம் எலபுர்கா தாலுகா போடூர் கிராமத்தை சேர்ந்தவர் கீதா (வயது 45). இவருக்கு கடந்த ஜூலை மாதம் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை இருந்தது. இதற்கு சிகிச்சை பெற்று குணமாகவில்லை. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 13-ந்தேதி அவர் கொப்பல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  அவரது நுரையீரலில் 90 சதவீத வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் மூச்சுத்திணறலால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் வென்டிலேட்டர் மற்றும் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை. இதை பெரும் சவாலாக எடுத்துக்கொண்ட அரசு டாக்டர்கள் கீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

158 நாட்களுக்கு பிறகு மீண்டார்

  அதன் பலனாக 104 நாட்களுக்கு பிறகு அவரது உடல் நலம் தேறியது. இதையடுத்து வென்டிலேட்டர் அகற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது. அதைத்தொடர்ந்து மெல்ல மெல்ல அவரது உடல் நலம் தேறி வந்தது.

  இந்த நிலையில் 158 நாட்களுக்கு பிறகு கீதா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டார். இதனால் அவரை டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்

  கிட்டத்தட்ட கீதா சாவின் விளிம்புக்கு சென்று உயிர் திரும்பி இருப்பதாகவும், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் 158 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிருடன் திரும்பியதும் இதுவே முதல் முறை என்றும் கொப்பல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.

  158 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வந்த கீதாவின் குடும்பத்தினரும் அவரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீரில் திளைத்தனர். அத்துடன் கொரோனா தொற்றில் மிகவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் சாதனைகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் போடூர் கிராம மக்களின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story