20 செம்மறி ஆடுகள் மர்ம சாவு - பயிற்சி கால்நடை டாக்டர் மீது குற்றச்சாட்டு


20 செம்மறி ஆடுகள் மர்ம சாவு - பயிற்சி கால்நடை டாக்டர் மீது குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Dec 2021 3:34 AM IST (Updated: 8 Dec 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

பங்காருபேட்டையில் 20 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் செத்தன. இதுதொடர்பாக பயிற்சி கால்நடை டாக்டர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

கோலார்:

செம்மறி ஆடுகள்

  கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா புனகல்தொட்டி கிராமத்தை சமாஜப்பா. விவசாயி. இவரது மனைவி சாரம்மா. இவர்கள் தங்களுக்கு சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய செம்மறி ஆடுகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

  இதனால், அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த பயிற்சி கால்நடை மருத்துவர் பிரதீப் குமாரிடம் செம்மறி ஆடுகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மருந்து கொடுக்கும்படியும் கேட்டுள்ளனர். பிரதீப்குமாரும், ஆடுகளுக்கு மருந்து கொடுத்து அனுப்பி உள்ளார்.

மர்ம சாவு

  இந்த நிலையில், அவர் கொடுத்த மருந்தை தம்பதியினர் செம்மறி ஆடுகளுக்கு கொடுத்துள்ளனர். அந்த மருந்தை சாப்பிட்ட சில மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக செம்மறி ஆடுகள் மயங்கி விழுந்து செத்தன. மொத்தம் 20 செம்மறி ஆடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தன.

  செம்மறி ஆடுகள் செத்து மடிந்து கிடப்பதை பார்த்து சமாஜப்பா, சாரம்மா கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும், பயிற்சி கால்நடை மருத்துவராக இருக்கும் பிரதீப் குமார் தான் மருந்தை மாற்றி எழுதி கொடுத்ததாகவும், இதனை சாப்பிட்டதால் செம்மறி ஆடுகள் செத்ததாகவும் அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

  பிரதீப் குமார் கடந்த 3 ஆண்டுகளாக அங்குள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

போலீசில் புகார்

  இதுபற்றி தகவல் அறிந்ததும் கால்நடை மருத்துவர் விரைந்து வந்து செத்துபோன செம்மறி ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை நடத்தினார்கள். பின்னர் அந்த செம்மறி ஆடுகள் அதேப்பகுதியில் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் செம்மறி ஆடுகள் ெசத்ததற்கான காரணம் தெரியவரும்.

  இதுகுறித்து தம்பதி, பூதிக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story