தலைவாசல் அருகே பயங்கரம்: கல்குவாரி உரிமையாளர் கடத்திக்கொலை-காரில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


தலைவாசல் அருகே பயங்கரம்: கல்குவாரி உரிமையாளர் கடத்திக்கொலை-காரில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x

தலைவாசல் அருகே ரூ.1 கோடி பணத்திற்காக கல்குவாரி உரிமையாளர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். காரில் தப்பிச்சென்ற அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தலைவாசல்:
தலைவாசல் அருகே ரூ.1 கோடி பணத்திற்காக கல்குவாரி உரிமையாளர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். காரில் தப்பிச்சென்ற அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
டிப்பர் லாரி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி அரசு மறுவாழ்வு இல்லம் அருகில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு ஒரு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற, தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசார் சந்தேகமடைந்து டிப்பர் லாரி நின்ற இடத்திற்கு சென்றனர். 
அந்த டிப்பர் லாரியின் அருகில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடினர். அதே நேரத்தில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் அங்கு வந்த போலீசாரும் அவர்கள் இருவரையும் விரட்டி பிடிக்க சென்றனர்.
வாலிபர் சிக்கினார் 
இதில் ஒரு வாலிபர் அருகிலுள்ள மரவள்ளிக்கிழங்கு காட்டில் வைத்து போலீசாரிடம் பிடிபட்டார். மற்றொருவர் அருகில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லம் அருகில் உள்ள வனப்பகுதியில் தப்பி ஓடிவிட்டார்.
 போலீசிடம் பிடிபட்ட வாலிபர், திருப்பூர் மாவட்டம் ஆலம்பாளையம் முத்தூர் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் நவீன் (வயது 21) என தெரியவந்தது. இதையடுத்து நவீனை அந்த லாரி நின்ற இடத்திற்கு போலீசார் அழைத்து வந்து லாரியில் சோதனையிட்டனர்.
கல்குவாரி உரிமையாளர்
அங்கு டிரைவர் சீட்டுக்கு அருகில் தலையில் வெட்டுக்காயத்துடன் அடித்து கொலை செய்யப்பட்டு முதியவர் ஒருவர் பிணமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், திருப்பூர் மாவட்டம் முத்தம்பாளையம் கிழக்கு தோட்டம் பகுதியில் வசித்து வந்த சாமிநாதன் (65) என தெரியவந்தது. இவர் கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் கல்குவாரி நடத்தி வந்தார்.
பணத்துக்காக இவரை கரூர் பகுதியில் இருந்து அவரது டிப்பர் லாரியில் கடத்திய மர்ம கும்பல் சேலம் மாவட்ட பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. எதிர்பார்த்த தொகை வந்து சேராததால் அவரை கடத்தல் கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பின் இந்த கொலையில் நவீன் உள்பட எத்தனை பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். 
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சாமிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 
ரூ.1 கோடி கேட்டு கல்குவாரி உரிமையாளரை கடத்தி வந்த கும்பல் ஒரு காரில் தப்பி சென்று விட்டதாகவும் தெரிகிறது. அந்த கும்பலையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கிரசர் உரிமையாளரை கடத்தி கொண்டு வந்த டிப்பர் லாரியை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே கரூரை சேர்ந்த விஜய் என்பவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரூ.1 கோடி கேட்டு கல்குவாரி உரிமையாளர் டிப்பர் லாரியில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story