‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 8 Dec 2021 3:19 PM IST (Updated: 8 Dec 2021 3:19 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

செய்தி வந்தது, குப்பைகள் மறைந்துபோனது



சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் குமரன் தெரு - வ.உ.சி. தெரு சந்திக்கும் பகுதியில் அதிகளவு குப்பைகளும், மாட்டுச்சாணமும் கொட்டப்பட்டு வரும் செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த குப்பை கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டு, அப்பகுதியில் பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டன. மாநகராட்சியின் இந்த துரித நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மின்வாரியத்தின் உடனடி நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பாபுஜிநகர் 6-வது தெருவில் உள்ள மின்கம்பம் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து ஆபத்தான நிலையில் காட்சி தருவது குறித்த செய்தி, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து பாதிப்புக்குரிய அந்த மின்கம்பம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, புதிய மின்கம்பம் வைக்கப்பட்டு உள்ளது. மின்வாரியத்தின் இந்த விரைவான நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

கழிவுநீர் அகற்றம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஸ் நிலைய வளாகத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகள் இருக்கும் பகுதியில் கழிவுநீர் பெருமளவு சூழ்ந்து அசுத்தமாக காட்சியளிக்கும் செய்தி, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக தேங்கிக்கிடந்த கழிவுநீர் உடனடியாக அகற்றப்பட்டது. இந்த உடனடி நடவடிக்கைக்கு அப்பகுதி மக்களும், பயணிகளும் நன்றி தெரிவித்து உள்ளனர்.

சரிந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டி


சென்னை சூளைமேடு ஆண்டவர் தெருவில் மின் இணைப்பு பெட்டி மழையால் சேதமடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. பல நாட்களாக இந்தநிலை நீடிக்கிறது. இதுவரை மின்வாரியம் இதை கவனத்தில் கொள்ளவில்லை. மக்கள் நடமாட்டமும், வாகன நடமாட்டமும் நிறைந்த இப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்னர் மின்வாரியம் உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

- வி.ஜாக்குவார்நாதன், சூளைமேடு.

போதை ஆசாமிகள் அட்டூழியம்

சென்னை சூளைமேடு ஸ்ரீராமபுரம் 2-வது தெருவில் ஷியாம் பிளாட் பகுதியில் (ஜெமினி ஸ்கூல் அருகில்) சிலர் இரவு வேளையில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். சாலையோரம் வாகனங்களை மறைவாக நிறுத்தி இந்த செயலை அவர்கள் அரங்கேற்றி வருகிறார்கள். பலமுறை புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்ளாதது போல இருக்கிறார்கள். என்னவென்று சொல்ல?

- பகுதிவாசிகள், ஸ்ரீராமபுரம்.

குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம்

சென்னை பெசன்ட் நகர் அண்ணா காலனி முதல் தெருவில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் குழாய் அடைப்பு காரணமாக தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் விளைவாக இப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் மிகுதியாக இருக்கிறது. தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு அப்பகுதிவாசிகள் ஆளாக நேரிடும்.

- பொதுமக்கள், அண்ணா காலனி.

சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடம்



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி கட்டிடம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அரசு ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதியில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கட்டிடத்தின் நுழைவுவாயிலின் மேற்பகுதி பெயர்ந்து விழுந்தது. சிதிலமடைந்த அந்த பழைய கட்டிடத்தை இடித்து புதிய பள்ளி கட்டிடத்தை கட்டித்தர அரசு முன்வர வேண்டும்.

பொதுமக்கள், பெரியகளக்காட்டூர்.

எரியாமல் இருக்கும் தெருவிளக்கு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் ராணி அண்ணாநகர் 3-வது குறுக்குத்தெருவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தெருவிளக்கு பழுதாகி எரியாமல் இருக்கிறது. இதனால் மாலை மற்றும் இரவு வேளையில் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சம் கொள்கிறார்கள். இந்த தெருவிளக்கு சீரமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பி.முத்துக்குமார், சமூக ஆர்வலர்.

ஆரம்ப சுகாதார நிலையம் தேவை

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வெடால் காலனியில் மழை‌ வெள்ளத்தால் ரோடுகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. ‌தெரு விளக்குகள் சரியாக ‌எரிவதில்லை. மலேரியா, பெரியம்மை, கொரோனா போன்ற நோய் பரவும் நேரங்களில் ‌பொதுமக்கள் சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையம் இப்பகுதியில் அமைக்க வேண்டும். இதனால் இப்பகுதிவாசிகள் நன்மையை பெறமுடியும்.

- பொதுமக்கள், வெடால் காலனி.

பாதாள சாக்கடை மூடி சேதம்




 
காஞ்சீபுரம் மாவட்டம் மொட்டைகுளம் தெருவில் பாதாள சாக்கடை மூடி உடைந்த நிலையில் உள்ளது. இந்தநிலை 6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரிய இடையூறு ஏற்படுகிறது. சிறுவர்-சிறுமிகள், முதியோரும் இதில் சிக்கி விபத்துக்குள்ளாக நேரிடலாம். இந்த பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?

- சமூக ஆர்வலர்கள், காஞ்சீபுரம்.

Next Story