வீடு புகுந்து பொருட்களை திருடும் கும்பல்
கூடலூரில் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து மர்ம கும்பல் பொருட்களை திருடி வருகிறது. இதனால் அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
கூடலூர்
கூடலூரில் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து மர்ம கும்பல் பொருட்களை திருடி வருகிறது. இதனால் அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
வீடுகளை நோட்டமிடும் ஆசாமிகள்
தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் கூடலூருக்கு அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத கும்பல் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.
கூடலூர் அதிகாரிவயல், 1-ம் மைல், கோத்தர் வயல் உள்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் ஆசாமிகள் நடமாட்டம் பதிவாகி வருகிறது. மேலும் நகரின் மைய பகுதியில் சில வணிக நிறுவனங்களின் பூட்டுகளை உடைத்து திருட்டு முயற்சி சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகள் கைது செய்யப்படவில்லை.
பொருட்கள் திருட்டு
இதற்கிடையில் கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் துப்புகுட்டிபேட்டை பகுதியில் பொதுமக்களின் வீடுகளில் வைத்திருந்த பொருட்கள் திருடு போனது. மேலும் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை ஒரு ஆசாமி திருடி சென்றார்.
இக்காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. நேற்று காலை வழக்கம்போல் வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் அடையாளம் தெரியாத ஆசாமியால் பொருட்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்
மேலும் ஸ்கூட்டரை திருடிச்சென்ற ஆசாமி வாகன பதிவு எண்ணை அழித்துவிட்டு சுமார் 200 மீட்டர் தொலைவில் அதை நிறுத்திவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கூடலூர் நகர பகுதியில் நள்ளிரவில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அதனால் வீடுகளில் உள்ள பொருட்கள் அடிக்கடி திருடு போகிறது. எனவே போலீசார் இரவு நேர கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story