குடிநீர் கிணறு தூர்வாரப்படுமா
சேறும், சகதியும் கலந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் குடிநீர் கிணறு தூர்வாரப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பந்தலூர்
சேறும், சகதியும் கலந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் குடிநீர் கிணறு தூர்வாரப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
குடிநீர் கிணறு
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மாங்கோடு அருகே உள்ள திருவம்பாடியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வயல் பகுதியில் தனியார் நிலத்தில் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் மேடான பகுதியில் உள்ள தொட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அந்த நீர்தேக்க தொட்டியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
தொற்று நோய் பரவும் அபாயம்
இந்த நிலையில் அந்த தொட்டியில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர கிணற்றில் உள்ள தண்ணீரும் சேறும், சகதியும் கலந்து காணப்படுகிறது. இதனால் சுகாதாரமற்ற தண்ணீரை மக்கள் குடிக்கும் அவலம் நீடிக்கிறது. மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
தூர்வார வேண்டும்
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் கிணறு முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் கிணற்றில் உள்ள தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. மேலும் குடிநீர் குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. கிணற்றுக்கு மேல்மூடியும் இல்லை.
இதனால் காற்றில் பறந்து வரும் குப்பைகள் கிணற்றில் படிகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதால் அந்த கிணற்றை தூர்வாரி முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story