பீட்ரூட் விளைச்சல் பாதிப்பு
பீட்ரூட் விளைச்சல் பாதிப்பு
உடுமலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பீட்ரூட் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காய்கறி சாகுபடி
உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் அமராவதி, திருமூர்த்தி அணைகள் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை, வாழை, கரும்பு, நெல், சப்போட்டா, மா போன்ற பயிர்களும் கத்தரி, வெண்டை, அவரை, தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும், கீரை வகைகளும், மானாவாரியாக கம்பு, சோளம், உளுந்து, எள் போன்ற தானியங்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் பாசனத்திற்கு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமூர்த்தி அணையின் 4 ம் மண்டல பாசனத்தில் தக்காளி, பீட்ரூட், அவரை போன்ற காய்கறி சாகுபடிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.
பீட்ரூட்
அந்த வகையில் உடுமலை, தளி பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் பீட்ரூட் செடிகளை பராமரித்து வந்தனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் பீட்ரூட் செடிகள் சிவப்பு நிறத்துக்கு மாறி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story