தூத்துக்குடியில் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
தூத்துக்குடியில் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நிரந்தர வடிகால் வசதிக்கு பழைய வரைபடங்கள் மூலம் ஆய்வு செய்யப்படும். நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கனமழை
வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக மோட்டார் மூலம் வெளியேற்றி விட்டோம். கடந்த 25-ந்தேதி பெய்த கனமழையால் புதிதாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 50 எச்.பி. திறன் கொண்ட மோட்டார்களும் வரவழைக்கப்பட்டு தண்ணீர் அகற்றப்படுகிறது. கடந்த ஆண்டு 13 செ.மீ. மழையை சந்தித்தோம். தற்போது முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதால் கூடுதல் மழை பெய்தும் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. முத்துகிருஷ்ணாபுரம், லெவிஞ்சிபுரம் பகுதியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வேகமாக மழைநீர் வடிந்து உள்ளது. முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர், ராம்நகர் பகுதியிலும் மழைநீர் சுமார் 1¼ அடி வரை குறைந்து உள்ளது.
ரூ.89 கோடி
கனமழை காரணமாக சாலைகள் சேதம் அடைந்து உள்ளன. பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், சாலைகளில் தோண்டி குழாய் போடப்பட்ட பகுதிகளில் சிறிய பாலம் அமைக்கவும் ரூ.89 கோடி நிதி கேட்டு உள்ளோம். இதேபோன்று நிரந்தர தீர்வாக மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு உதவி இயக்குனர் (நில அளவை) தலைமையில் தலா ஒரு சர்வேயர், தாசில்தார், உதவியாளர் அடங்கிய 8 குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் பழைய வரைபடங்களை வைத்து மாநகராட்சி பகுதியில் வடக்கில் இருந்து வரும் ஓடைகள் கிழக்கு நோக்கி சென்று கடலில் கலக்கும் நீர்வழித்தடத்தை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. ஓரிரு நாளில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நிரந்தரமாக வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். எட்டயபுரம் ரோட்டுக்கு மேற்கு பகுதியில் வடக்கு நோக்கி 3½ கிலோமீட்டர் தூரத்துக்கு பெரிய குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த குழாய் பதிக்கும் பணி முடிவடைந்தவுடன் தண்ணீரை பம்பிங் செய்யும் பணி தொடங்கப்படும்.
நடவடிக்கை
மாப்பிள்ளையூரணி மாதாநகர் தாம்போதி ஓடையை நேரடியாக கடலில் கலக்கும் பகுதியிலும், சத்யா தியேட்டர் வழியாக கலைஞர் நகர் வரை செல்லும் தாம்போதி ஓடையும் கண்டறியப்பட்டு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டால், உடனடியாக தண்ணீர் வெளியேற்றப்படும்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தண்ணீரை வெளியேற்றுவதற்கு உரிய பம்பிங் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனசேகரன் நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.187 கோடி மதிப்பில் ஆசிய வங்கி வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள் திட்டமிட்டு செயல்படுத்தப்படவில்லை. இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அம்பேத்கர் நகர், சிதம்பரநகர், குமரன்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் ஊற்ெறடுத்துக் கொண்டே இருப்பதால் மழைநீர் தேங்கி இருக்கிறது. மாநகரம் முழுவதும் 438 மோட்டார்கள் வைத்து மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள், தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை துரிதமாக நிறைவேற்ற உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story