தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 8 Dec 2021 8:33 PM IST (Updated: 8 Dec 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 100 செல்போன்களை தனிப்படை போலீசார் மீட்டனர். இந்த செல்போன்களை போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு உரிமையாளர்களிடம் வழங்கினார்.
தனிப்படை
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்தார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
செல்போன்கள் மீட்பு 
விசாரணையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது-
பண பரிவர்த்தனை
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வருடத்தில் காணாமல் போன ரூ.45 லட்சம் மதிப்புள்ள 453 செல்போன்கள் கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சைபர் குற்றம், இணைய தளம், ஆன் லைன் மோசடி, சமூக வலைதளங்களின் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறித்து மாவட்ட போலீஸ் துறை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திலோ அல்லது தங்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலோ புகார் அளித்தால் தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும் செல்போன் காணாமல் போனவர்கள் பலர், அதில் புகைப்படங்கள் உள்ளது, பாஸ்வேர்டு பதிவு செய்து வைத்துள்ளேன் என்று கூறுகின்றனர். ஆகவே பொதுமக்களுக்கு சொல்வது என்னவென்றால் பாஸ்வேர்டு போன்ற முக்கியமான தகவல்களை செல்போனில் சேமித்து வைக்காதீர்கள், செல்போனில் ஸ்கீரீன் லாக் மற்றும் பேட்டர்ன் லாக் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் பாதுகாப்பாக இருக்கும். செல்போன் மூலம் ஆன் லைன் பணப்பரிவர்த்தனை செய்யப்படுகிறது, அதில் அடையாளம் தெரியாத அந்நிய நபர்களுடன் பணப்பரிவர்த்தனை செய்யாதீர்கள். இந்த காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story