தூத்துக்குடியில் சிறப்பு தொழில் கடன்மேளா
தூத்துக்குடியில் சிறப்பு தொழில் கடன்மேளாவை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சிறப்பு தொழில் கடன் மேளாவை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
கடன் மேளா
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, இளம் தொழில் முனைவோருக்கு கடன் உதவிகளை வழங்கி பேசினார். அப்போது, தொழில் முனைவோர்கள் மீது நம்பிக்கை வைத்து கடன் வழங்கி உள்ளார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றி கடனை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும். குறுகிய காலத்தில் அதிக அளவிலான பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு தொழில் முனைவோர்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள். தூத்துக்குடி நகரம் சிறிய நகராட்சியாக இருந்து இன்று பெரிய மாநகராட்சியாக உயர்ந்திருப்பதற்கு காரணம் தொழில்முனைவோர்கள் தான். தூத்துக்குடிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில் புரிவதற்கு தொழில் முனைவோர்கள் வருவதற்கு நகரில் அனைத்து வசதிகளும் இருப்பதுதான் காரணம். மண்ணின் மைந்தர்களாகிய உங்களது ரத்தத்திலேயே தொழில் புரிவதற்கான உணர்வு இருக்கிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கு அரசு முனைப்புடன் இருக்கிறது.
தளவாட பூங்கா
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சிப்காட் மட்டுமல்லாமல் அதற்கு அருகே சுமார் 1500 ஏக்கர் பரப்பில் தளவாடபூங்கா அமைப்பதற்கு நிலம் கையப்படுத்தும் பணிகள் நிறைவுபெற்று தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தளவாட பூங்கா தொடங்கப்பட்டு இங்கு உற்பத்தி செய்யப்படும் தளவாடங்கள் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். மேலும் சுமார் 100 ஏக்கர் பரப்பில் காற்றாலை நிறுவனம் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி மையம் ஆகியவை நிறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் முனைவோர்கள் அதிக அளவில் முதலீடு செய்து நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி நீங்கள் புதியதொழில்களை தொடங்கி சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் சுவர்ணலதா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அலுவலர் மோத்தா, கிளை மேலாளர் கண்ணன், திட்ட அலுவலர் விசுவவாணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story