உளுந்தூர்பேட்டையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தலைமை ஆசிரியருடன் விஷம் குடித்த மனைவி சாவு
உளுந்தூர்பேட்டையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்ததில் தலைமை ஆசிாியருடன் விஷம் குடித்த மனைவி பரிதாபமாக இறந்தார்.
ரிஷிவந்தியம்,
தலைமை ஆசிரியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமரன்(வயது 50). இவர் உளுந்தூர்பேட்டை அடுத்த பின்னலவாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அமுதவல்லி(44). இவர்கள் இருவரும் சேர்ந்து தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்த நிலையில் தீபாவளி சீட்டு நடத்தியதில் இவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சீட்டு கட்டிய நபர்கள் கணவன்-மனைவியிடம் தாங்கள் கட்டிய சீட்டு பணத்தை திருப்பி கேட்டு வந்தனர்.
கணவன்-மனைவி விஷம் குடித்தனர்
இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கணவன்-மனைவி இருவரும் விஷத்தை வாங்கிக் கொண்டு ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் வனப்பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் இருவரும் விஷத்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள், இதுபற்றி பகண்டை கூட்டுரோடு போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கணவன்-மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணை
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அமுதவல்லி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமரனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story