ஊர்,ஊராக சென்று வாழைப்பழம் விற்கும் விவசாயிகள்
வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் ஊர், ஊராக சென்று விவசாயிகள் வாழைப்பழம் விற்று வருகின்றனர். எனவே சேதமடைந்த வாழை பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் ஊர், ஊராக சென்று விவசாயிகள் வாழைப்பழம் விற்று வருகின்றனர். எனவே சேதமடைந்த வாழை பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளே விற்பனை செய்யும் அவலம்
தமிழர்களால் போற்றப்படும் முக்கனிகளான மா, பலா மற்றும் வாழை. இவைகளில் வாழைப்பழம் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது என்றால் மிகையாகாது. வாழைப்பழம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் இவை பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடாரம்கொண்டான், செம்பனார்கோவில், ராதாநல்லூர், அல்லி விளாகம், கீழையூர் உள்ளிட்ட இடங்களில் பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, மொந்தன், கற்பூரவள்ளி உள்ளிட்ட ரக வாழைகள் பயிரிடப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பயிரிடப்பட்ட வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் அவற்றை முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் காரணமாக, தற்போது வாழைப்பழத்தை விற்க முடியாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். விவசாயிகள் ஆண்டு முழுவதும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து மேற்கண்ட கிராமத்திற்கு வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வந்தனர். தற்போது மேற்கண்ட நகரங்களில் தொடர் மழையின் காரணமாகவும், விற்பனை மந்தம் ஆகி விட்ட காரணத்தாலும் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வருவதில்லை. இதன் காரணமாக விவசாயிகளே வாகனங்களில் ஊர், ஊராக சென்று வாழைப்பழங்களை விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நிவாரணம்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், தை மாதம் அறுவடைக்கு வருவதற்கு தயாராக இருந்த வாழை மரங்கள், கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக முன்கூட்டியே அதனை அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மேலும் முக்கிய நகரங்களுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையும் நிலவுகிறது. எனவே இந்த அழுகும் பொருளை வைத்துக்கொள்ள முடியாமல், நாங்களே நேரடியாக விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது விலை குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் உரிய கணக்கெடுப்பு நடத்தி வாழை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story