தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி 3-வது வார்டில் அமைந்துள்ள அங்கன்வாடியில் சுமார் 30 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடு போல் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் அங்கன்வாடி முன்பு குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், குப்பைகளை அகற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், முசிறி, திருச்சி.
ஆபத்தான குடிநீர் தொட்டி
திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு, கொட்டகொல்லைத் தெருவில் 40 ஆண்டுகளாக குடிநீர்தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி கடந்த சில வருடங்களாக பயன்பாட்டில் இல்லை. தற்பொழுது குடிநீர் தொட்டி ஒரு புறமாக சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் மிகவும் ஆபத்தாக உள்ளது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். குடிநீர் தொட்டி உடைந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த குடிநீர் தொட்டியை சரி செய்ய வேண்டும் அல்லது அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வி, திருச்சி
சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், 22-வது வார்டு தோப்புத்தெரு பகுதியில் பன்றிகள் ஏராளமாக சுற்றித்திரிகிறது. பன்றிகள் அந்த வழியாக நடந்து செல்பவர்களை கடிக்க வருவதுபோல் துரத்துகின்றன. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துவதினால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மிகவும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பன்றிகளை உடனடியாக பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லெட்சுமி, அரியமங்கலம், திருச்சி.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாநகரம் அரியமங்கலம் கோட்டம் 15-வது வார்டு கிழக்கு தாராநல்லூர் பி.எஸ்.நகர் பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதியும், வடிகால் வசதியும் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி மழைநீருடன் கலந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தாராநல்லூர், திருச்சி.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், குண்டூர் பர்மா காலனியில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பள்ளி வளாகத்தில் உள்ளே குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்குள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தியாகசாந்தன் , குண்டூர் பர்மா காலனி, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து அரசு மருத்துவமனை வழியாக புத்தூர் 4 ரோடு வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் மோட்டார் சைக்கிள்கள்களில் செல்வோர் சாலையில் விழுந்து காயம் ஏற்பட்டு. மேலும் இந்த சாலை வழியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான ஆம்புலன்சுகளும் சென்று வருகின்றன. இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவி, திருச்சி
மின்மாற்றி விரைவில் பயன்பாட்டிற்கு வருமா?
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங்களாந்தபுரம் தெற்கியூர் காலனியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மின்மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் முடியவில்லை. இதனால் மேற்கண்ட பகுதியில் இரவு நேரங்களில் குறைவான அளவே மின்சாரம் வருகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் இரவு தூங்க முடியாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மின்மாற்றி அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் மின்சாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தேவா, துறையூர், திருச்சி
சாலையில் சண்டை போடும் மாடுகளால் விபத்து
திருச்சி மாநகராட்சி வார்டு எண் 38-ல் சாலை பகுதிகளில் மாடுகள் படுத்து கொண்டும் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு கொள்கிறது. இதனால் சில நேரங்களில் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சித்ரா, திருச்சி
Related Tags :
Next Story