பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் மறியல்


பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் மறியல்
x
தினத்தந்தி 9 Dec 2021 12:26 AM IST (Updated: 9 Dec 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் இருந்து கும்பகோணம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். தினமும் காலை 7-30 மணி முதல் 8-30 மணிக்குள் தா.பழூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவர்கள் பஸ் மூலம் கும்பகோணம் செல்கிறார்கள். இந்த நேரத்தில் தா.பழூர் பகுதியில் இருந்து ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. ஜெயங்கொண்டத்தில் இருந்து வரும் அந்த பஸ்சில் வழிநெடுக பயணிகளும், மாணவ-மாணவிகளும் அதிக அளவில் பயணித்து வருவதால் தா.பழூர் வரும்போது கூட்டம் காரணமாக மாணவர்களை சிலநேரம் ஏற்றாமல் அந்த பஸ் சென்று விடுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கமான நேரத்திற்கு வந்து காத்திருந்த மாணவ-மாணவிகள் அரசு பஸ் வராததால் ஆத்திரமடைந்த அவர்கள் கூடுதல் பஸ் இயக்கக் கோரி தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story