மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - தொழிலாளி பலி
குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குடவாசல்:
குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்கனூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் முத்து என்கிற முத்துவேல் (வயது 35). விவசாய தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. சுபா என்கின்ற மனைவி உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சேங்கனூரில் இருந்து வெள்ளமண்டபம் என்ற இடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
அப்போது சேங்கனூர் ஆத்தங்கரை தெருவை சேர்ந்த சங்கு மகன் பாஸ்கர் (26) என்பவரும், விழிதியூர் ரோட்டு தெருவை சேர்ந்த இளங்கோ மகன் பிரசன்னா (25) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுதியூரில் இருந்து சேங்கனூரை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது வெள்ள மண்டபம் என்ற இடத்தில் சென்ற போது எதிரே முத்துவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி கொண்டன.
தொழிலாளி பலி
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முத்துவேல் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த பாஸ்கர் மற்றும் பிரசன்னா ஆகிய 2 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த உடன் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த முத்துவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story