நகைக்காக நடந்த இரட்டைக் கொலை என உறவினர்கள் போராட்டம்


நகைக்காக நடந்த இரட்டைக் கொலை என உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2021 12:35 AM IST (Updated: 9 Dec 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் அருகே தாய்- மகள் எரிந்து கிடந்த சம்பவத்தில் நகைக்காக அவர்கள் எரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்
மண்டபம் அருகே தாய்- மகள் எரிந்து கிடந்த சம்பவத்தில் நகைக்காக அவர்கள் எரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கருகி கிடந்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 58). இவர் ரெயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் சண்முகப்பிரியா. 2-வது மகள் மணிமேகலை(34). 
நேற்று முன்தினம் காளியம்மாள் மற்றும் அவரின் 2-வது மகள் மணிமேகலை ஆகியோர் தீயில் எரிந்த நிலையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து சண்முகப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இந்தநிலையில் சண்முகப்பிரியா மற்றும் உறவினர்கள், தமிழ்புலிகள் கட்சி, அருந்ததியர் சங்கம், ஆதிதமிழர்பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஏராளமானோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். 
இதனை தொடர்ந்து அனைவரும் அந்த இடத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாயும், மகளும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். 
உரிய நடவடிக்கை
மேலும் சண்முகப்பிரியா மனு அளிக்க முயன்றார். அந்த மனுவில், எனது தாய், சகோதரி அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த நகைகள், ரொக்க பணம் முதலியவற்றை காணவில்லை. நகைக்காகத்தான் இந்த சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனவே, இதுதொடர்பாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அப்போது அங்கு ராமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசிங் வந்து மனுவை பெற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். தாயும் மகளும் இறந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறோம். நவீன தொழில்நுட்ப அடிப்படையில் விசாரணையை  துரிதப்படுத்தி உள்ளோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். முதுகுளத்தூர் சம்பவத்தில் மணிகண்டனின் உடல் ஐகோர்ட்டு உத்தரவின்படி பிரேத பரிசோதனை செய்ததால் நேற்று தீயில் கருகி இறந்த தாய்- மகளின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story