இ-சேவை மையத்தில் பெண் ஊழியரை தாக்கிய ஓய்வுபெற்ற சிறை காவலர் மகன் கைது
பெண் ஊழியரை தாக்கிய ஓய்வுபெற்ற சிறை காவலர் மகன் கைது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வரகூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 38). இவர் பெரம்பலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அவரிடம் பெரம்பலூா் அருகே செஞ்சேரி வள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறை காவலர் கருணாமூர்த்தி மகன் கவுதமன் (36) வந்து ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்கான ஆவணங்களை அவரிடம் தனலட்சுமி கேட்டுள்ளார். அப்போது கவுதமன், தனலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்த தனலட்சுமியை கவுதமன் தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரின் முடியை பிடித்து இழுத்து, தாக்கி முதுகில் கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தனலட்சுமி சிகிக்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சோ்ந்தார்.
கைது
இதுதொடர்பாக தனலெட்சுமி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் கவுதமன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மீதும் தாக்குதல்
தனலட்சுமியை கவுதமன் தாக்கியதை கண்ட அங்கு நின்றவர்கள் இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவுதமனை பிடித்து விசாரிக்க முயன்றார். அப்போது கவுதமன் அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் இ-சேவை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story