கல்லூரி முதல்வர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்


கல்லூரி முதல்வர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்
x
தினத்தந்தி 9 Dec 2021 1:01 AM IST (Updated: 9 Dec 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடினார். இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடக்கிறது.

திருச்சி, டிச.9-
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடினார். இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடக்கிறது.
பல்கலைக்கழகத்தில் ஆய்வு
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் புறப்பட்டு நேற்று காலை 11 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவரை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் கார் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு மதிய உணவிற்கு பின்னர், பல்கலைக்கழக மைய நூலகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்து கேட்டறிந்ததோடு, நூலக ஊழியர்களுடன் கலந்துரையாடினார். பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மூலிகை தோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மூலிகை தோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக மூலிகை தோட்டம் சேதம் அடைந்தது. இந்த மூலிகை தோட்டம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் அர்ப்பணித்தார்.
கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடல்
மேலும், பல்கலைக்கழக அறிவியல் மையம் உள்பட பல்வேறு இடங்களை ஆய்வு செய்த கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், இணைவுபெற்ற கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், முதுகலை மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவருடன் துணை வேந்தர் செல்வம், பதிவாளர் கோபிநாத் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். தொடர்ந்து இரவு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். காலை 8 மணிவரை ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாரதிதாசன்  பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.
பட்டமளிப்பு விழா
அங்கு பல்கலைக்கழக அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் 37-வது பட்டமளிப்பு விழாவில் வேந்தரும் கவர்னருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து உரையாற்றுகிறார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி வாழ்த்தி பேசுகிறார். இதில் புதுடெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழக (பொறுப்பு) தலைவர் கனகசபாபதி சிறப்புரையாற்றுகிறார்.
மதிய உணவிற்கு பின்னர், மாலை முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி. மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் நடைபெறும் கலந்துரையாடலில் அவர் கலந்து கொள்கிறார். இரவு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தங்கும் கவர்னர், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Next Story