மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறப்பு


மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 8 Dec 2021 8:12 PM GMT (Updated: 8 Dec 2021 8:12 PM GMT)

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையொட்டி தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அம்பை:
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையொட்டி தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மணிமுத்தாறு அணை

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் ஒன்றாக மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 118 அடி ஆகும். தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் `கிடுகிடு'வென உயர்ந்தது.

நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 117.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 849 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தண்ணீர் திறப்பு

எனவே, நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதை தொடர்ந்து அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் பாதுகாப்பை கருதி பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அண்ணாதுரை, தங்கராஜன், உதவி என்ஜினியர் முருகன், அணை கண்காணிப்பாளர் காளிகுமார் ஆகியோர் நேற்று மதியம் 1 மணி அளவில் தண்ணீரை திறந்து விட்டனர்.

3 மதகுகள் வழியாக சுமார் ஆயிரம் கனஅடி நீரும், 80 அடி கால்வாய் மதகு மூலமாக 400 கனஅடி நீரும், ஓடை மதகில் 5 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் சின்ன சங்கரன்கோவில் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கலந்து பாய்ந்து செல்கிறது.

ஒரே ஆண்டில் இரண்டு முறை

முன்னதாக அணை திறப்பதற்கான அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. அணையில் 116.50 அடி நீரை இருப்பு வைத்து விட்டு மீதமுள்ள தண்ணீர் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிமுத்தாறு அணை திறப்பையொட்டி நகர பஞ்சாயத்து அலுவலகம் சார்பில், ஆட்டோ மூலம் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு உள்ளதால் மணிமுத்தாறு ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது, கரையோரம் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
2016-ம் ஆண்டிற்கு பின் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தற்போதும் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story