தாய்க்கு சமமானவர்களை இனியும் அவமதிக்க வேண்டாம்


தாய்க்கு சமமானவர்களை இனியும் அவமதிக்க வேண்டாம்
x
தினத்தந்தி 9 Dec 2021 2:32 AM IST (Updated: 9 Dec 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

தாய்க்கு சமமானவர்களை இனியும் அவமதிக்க வேண்டாம் என்று பஸ்சில் இருந்து கண்டக்டரால் இறக்கி விடப்பட்ட பெண் கூறினார்.

குளச்சல், 
தாய்க்கு சமமானவர்களை இனியும் அவமதிக்க வேண்டாம் என்று பஸ்சில் இருந்து கண்டக்டரால் இறக்கி விடப்பட்ட பெண் கூறினார்.
பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டார்
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வமேரி (வயது 65). இவர் தினமும் காலையில் மீன் வாங்கி, குளச்சல் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தலையில் சுமந்து சென்று விற்பனை செய்வார். மீனை விற்று முடித்ததும், இரவில் குளச்சல் பஸ் நிலையத்துக்கு வந்து மகளிருக்கான அரசு இலவச பஸ்சில் ஏறி ஊருக்கு செல்வது வழக்கம்.
அதே போல் கடந்த 6-ந்தேதியும் மீன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு செல்வதற்காக குளச்சல் பஸ் நிலையத்துக்கு செல்வமேரி வந்தார். வாணியக்குடி செல்லும் அரசு பஸ் வந்ததும், அதில் செல்வமேரி ஏறியுள்ளார். அவரை பார்த்ததும் பஸ் கண்டக்டர், மீன் நாற்றம் வீசுவதால் பயணம் செய்ய முடியாது என்று கூறி இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
3 பேர் பணியிடை நீக்கம்
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வமேரி பஸ் நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு சென்று, பஸ்சில் ஏறிய என்னை எப்படி இறக்கி விடலாம் என்று ஆவேசமாக கூறினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த பஸ் கண்டக்டர் மணிகண்டன், டிரைவர் மைக்கேல், நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார்.
அவமதிக்க வேண்டாம்
பஸ்சில் இருந்து தன்னை இறக்கி விட்ட டிரைவர், கண்டக்டர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தகவல் செல்வமேரிக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டு கண்கலங்கிய அவர் கூறியதாவது:-
சம்பவம் நடந்த இரவு என்னை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட போது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. இந்த இரவு நேரத்தில் எப்படி ஊருக்கு செல்வது என்று தான் வருத்தப்பட்டேன். என்னை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட ஊழியர்கள் இருவருக்கும் என்னை போலவே தாய் இருப்பார்கள். அவருடைய தாயாருக்கு இப்படியொரு சம்பவம் நடந்தால் அவர் பொறுத்து ெ்காள்வாரா?
எனவே இனியாவது அவர்கள் தாய்க்கு சமமானவர்களை மரியாதையுடன் நடத்த கற்றுக்கொள்ள வேண்டும். எங்களை போன்றவர்களை அவமதிக்கும் முன்பு இதை நினைத்து கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் இனிமேல் யாருக்கும் இது போல் நடக்க கூடாது. மேலும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story